NATIONAL

பி.ஜே.டி. லிங்க் திட்டம் ரத்து- சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு- மந்திரி பெசார் வர்ணனை

ஷா ஆலம், ஏப் 18- பெட்டாலிங் ஜெயா டிஸ்பெர்சல் (பி.ஜே.டி.) லிங்க் நெடுஞ்சாலைத் திட்டத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவு சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷார் வர்ணித்துள்ளார்.

நீடித்து வந்த இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் வாரங்களில் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர் சொன்னார்.

அமைச்சரவையின் இந்த முடிவு தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாக  மாநில அரசு கருதுவதோடு அதனை வரவேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலைத் திட்டம் கைவிடப்படுவதாக வும் இதன் தொடர்பில் மேம்பாட்டாளருடன் தொடர்ந்து பேச்சுகள் நடத்தப்படாது என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி பாட்சில் நேற்று கூறியிருந்தார்.

இந்த திட்டத்தை தொடர்வதற்கு அரசாங்கம் விதித்த முன் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவை என்ற சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகவும் தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் தெரிவித்திருந்தார்.

பல நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் பூர்த்தி செய்யத் தவறியதால் இந்த திட்டம் இனியும் தொடரப்படாது. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய மேலும் கால அவகாசம் வழங்குவதில்லை என்பது அரசாங்கத்தின் முடிவாகும் என்றார் அவர்.

இதனிடையே, இந்த திட்டத்தில் மாநில அரசின் பங்கேற்பு குறித்து நிலவி வரும் குழப்பங்கள் குறித்து கருத்துரைத்த அமிருடின், இந்த பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலைத் திட்டம் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும் என தெளிவுபடுத்தினார்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்வது மற்றும் சுற்றுச்சூழல் தர நிர்ணயத்தை உறுதி  செய்வது ஆகியவை மட்டுமே மாநில அரசின் பணிகளாகும் என்றார் அவர்.


Pengarang :