ANTARABANGSA

தொடர் நிலநடுக்கங்களால் தைவான் அதிர்ந்தது

தைப்பே, ஏப் 23- தைவானின் கிழக்கு கரை பகுதியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை  80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவான இந்ந நிலநடுக்கத்தால் தலைநகர் தைப்பேயில் உள்ள  சில கட்டிடங்கள் குலுங்கியதாக அத்தீவு நாட்டின்  வானிலை நிர்வாகம் தெரிவித்தது.

நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை கிராமப்புற கிழக்கு மாநிலமான ஹூலாலியனை  மையமாகக் கொண்டிருந்தன.  கடந்த 3ஆம் தேதி   ஏற்பட்ட 7.2  ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தைவான் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில்  சேதமடைந்து  செயல்படாத  நிலையிலுள்ள ஒரு ஹோட்டல் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு பக்கம் சற்று சாய்ந்துள்ளதாக ஹூவாலியன் நகர தீயணைப்புத் துறை  கூறியது.

எனினும் இந்த பேரிடரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தைவான் இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பு பகுதிக்கு அருகில் உள்ளது. அதனால் அந்நாடு அடிக்கடி  பூகம்ப பாதிப்புக்கு ஆளாகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த  1999 ஆம் ஆண்டில் உலுக்கிய 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


Pengarang :