NATIONAL

தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தத் தடை- விரக்தியில் கட்டிடத்திலிருந்து குதிக்க 11 வயதுச் சிறுமி முயற்சி

ஈப்போ, ஏப் 24- தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த
விதிக்கப்பட்ட தடையின் காரணமாக விரக்தியடைந்த 11 வயதுச் சிறுமி
இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார்.

இச்சம்பவம், கம்பாரில் உள்ள தாபிஷ் மையத்தில் நேற்று நிகழ்ந்தது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார்
ஏழு நிமிடங்களில் அச்சிறுமியைச் சாந்தப்படுத்தி அந்த விபரீத
முயற்சியிலிருந்து காப்பாற்றியதாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி
நோர் அகமது கூறினார்.

நேற்று காலை 8.30 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத்
தொடர்ந்து தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இரண்டு மாடிக் கட்டிடத்தின் கூரையில் அச்சிறுமி அசையாது நின்று
கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சாந்தப்படுத்தி கூரையிலிருந்து கீழே கொண்டு
வந்தனர். தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற
அந்த தாபிஷ் மையத்தின் விதிமுறை காரணமாக கம்பார், கம்போங் பத்து
பூத்தே எனுமிடத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அச்சிறுமி
விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அச்சிறுமிக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறிய
அவர், இச்சம்பவத்திற்குப் பின்னர் குடும்பத்தினர் அச்சிறுமியை தங்கள்
வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் என்றார்.


Pengarang :