ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமை அரசின் வேட்பாளர் மீது மலாய் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு

உலு சிலாங்கூர், மே 1- கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியது முதல் ஒற்றுமை அரசின் வேட்பாளர் மீதான மலாய் வாக்காளர்களின் ஆதரவு நேர்மறையானதாக இருந்து வருகிறது.

மலாய் வாக்காளர்கள் மத்தியில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் பாங் சோக் தாவுக்கு இதுவரை நல்ல ஆதரவு இருந்து வருவதோடு வரும் மே 11ஆம் தேதிக்கு அந்த வரவேற்பு மேலும் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு உள்ளதாக  மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித்  தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று நான் பல மலாய் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்றேன். ஹராப்பான் வேட்பாளருக்கான அவர்களின் ஆதரவு நேர்மறையானதாக உள்ளது. எனினும், எதையும் முன்கூட்டியே கணிப்பது கடினம்.

பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன. ஒற்றுமை அரசின் வேட்பாளர் வெற்றி அடைவதை உறுதி செய்வதற்கு நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று மாநில மந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்குள்ள பத்தாங் காலியில் பத்தாங் காலி அனாக் மூடா ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய பாங் கோல குபு  பாரு தொகுதியை பிரதிநிதித்து சட்டமன்றத்தில் இடம் பெற தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.

எனக்கு வாய்ப்பு வழங்கப் பட்டால் நான் குழுவாக இணைந்து கோல குபு பாரு மக்களுக்கு சேவையாற்றுவேன் என அவர் குறிப்பிட்டார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்காத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேட்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின்,  சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு  மே மாதம் 11ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கு 14 நாட்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625 போலீஸ்காரர்கள் மற்றும் 238 ராணுவ வீரர்களும் அவர்களின் துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Pengarang :