ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு மார்ச் மாதம் வரை 58 லட்சம் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை

கோலாலம்பூர், மே 1- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 58 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மலேசியாவுக்கு வந்த 43 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இது 32.5 விழுக்காடு அதிகமாகும்.

சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, புருணை, இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து முதன்மை நாடுகளிலிருந்து இந்த சுற்றுப்பயணிகளை மலேசியா ஈர்த்ததாக சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங கிங் சிம் கூறினார்.

இது தவிர, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீனாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு வாடகை விமானங்கள் மூலம் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் 22 சிறப்பு வாடகை விமானச் சேவைகளின் வாயிலாக வாரத்திற்கு 3,600 பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

இவை தவிர, வூஹான், அஹ்மதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து கோலாலம்பூருக்கு இன்ஷியன் நகரிலிருந்து கோத்தா கினபாலு வுக்கும் அல்மாட்டி நகரில் இருந்து கோலாலம்பூருக்கும் கூடுதலாக 15 பயணச் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

வரும் 2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டிற்கான வியூக இலக்கு மீதான ஒருங்கமைப்பு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியா அரசாங்கம் அறிமுகப்படுத்திய சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாள் விசா விலக்களிப்புத் திட்டம் நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய சுற்றுலா சந்தைகளுக்கு குறிப்பாக மேற்கு ஆசியா, சீனா, இந்தியா, மற்றும் கொரியாவுக்கு விமானச் சேவையை அதிகரிப்பது, புதிய பயணத் தடங்களை அறிமுகம் செய்வது தொடர்பில் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், போக்குவரத்து அமைச்சு மற்றும் விமான நிறுவனங்களுடன் தாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :