ECONOMYMEDIA STATEMENT

அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பெர்லிஸ் மந்திரி புசாரிடம் எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ராஜெயா, மே 1- கடந்த 2022 முதல் பல்வேறு அடிப்படை வசதித் திட்டங்களை அமல்படுத்துவதில் அதிகாரத் துஷ்பிரயோகம் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பெர்லிஸ் மந்திரி புசார் முகமது சுக்ரி ரம்லியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரித்து வருகிறது.

பெர்லிஸ் மாநிலம் முழுவதும் பழுதுபார்ப்பு, பராமரிப்பு, விநியோகம் மற்றும் சேவைத் திட்டங்களை உட்படுத்திய அந்த அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 23 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டாரம் ஒன்று கூறியது.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று எம்.ஏ.சி.சி. தலைமையகம் அழைக்கப்பட்ட சுக்ரி காலை 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டதை எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

எட்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் எம்.ஏ.சி.சி. பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று காலை 9.50 மணியளவில் எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்த சுக்ரி, மாலை 6.55 மணியளவில் அங்கிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.

சுமார் மூன்று லட்சம் வெள்ளி மதிப்புள்ள விநியோகத் திட்டங்களை மேற்கொள்ள தனக்கு தொடர்புள்ள நிறுவனங்களுக்கு குத்தகை வழங்கிய சந்தேகத்தின் பேரில் வட மாநில உயர் அரசுத் தலைவர் வரும் விசாரிக்கப்பட்டு வருவதை எம்.ஏ.சி.சி. கடந்த மாதம் 28ஆம் தேதி உறுதிப்படுத்தியது.

மந்திரி புசார் அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பத்து லட்சம் வெள்ளி மதிப்பிலான சாலை பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு குத்தகைகளை மேற்கொள்வதற்கு தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களை அந்த தலைவர் நியமித்ததாக சந்தேகிக்கப்படுவதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

அந்த நிறுவனங்கள் யாவும் சம்பந்தப்பட்ட தலைவரின் மகனுடன் தொடர்புடையவை என்றும் நம்பப்படுகிறது.


Pengarang :