ECONOMYMEDIA STATEMENT

குறைந்த பட்ச சம்பள உத்தரவை பல முதலாளிகள் இன்னும் பின்பற்றவில்லை- எம்.டி.யு.சி. குற்றச்சாட்டு

ஈப்போ, மே 1- ஈராண்டுகளுக்கு முன்னர் அமலுக்கு வந்த 1,500 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறையை பொறுப்பற்ற பல முதலாளிகள் இன்னும் பின்பற்றவில்லை என எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

சம்பளத்திற்கு செலவிடும் தொகையைக் குறைப்பதற்காக இந்த விதிமுறையை தொடர்ந்து மீறி வரும் முதலாளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தை தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அதன் தலைவர் முகமது எஃப்பாண்டி அப்துல் கனி கூறினார்.

கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் முற்போக்கு சம்பளம் தொடர்பில் வெள்ளையறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்த போது பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறியது போல் இன்னும் பத்து விழுக்காட்டு சாதாரணத் தொழிலாளர்கள் மாதம் 1,500 வெள்ளிக்கும் குறைவானத் தொகையை ஊதியமாக பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எம்.யு.டி.சி. ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பேராக் மாநில மனித வளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசனும் கலந்து கொண்டார்.

2022ஆம் ஆண்டு குறைந்த பட்ச சம்பள உத்தரவு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இட வேறுபாடின்றி அனைத்து துறைகளுக்கும் இந்த முற்போக்கு சம்பள முறை பொருந்தும் என்பதோடு ஐந்துக்கும் மேற்பட்ட  தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகள் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

எனினும், ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்தும் திட்டம் 2023 ஜனவரி முதல் தேதியிலிருந்து 2023 ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Pengarang :