Wisma Majlis Bandaraya Shah Alam. Foto Facebook
ECONOMYPBTSELANGOR

62 வணிகர்களுக்கு வர்த்தக அனுமதி- ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியது

ஷா ஆலம், டிச 29- ஷா ஆலம் மாநகரின் தென் பகுதியில் 62 சிறு வணிகர்களுக்கு தற்காலிக  வர்த்தக அனுமதியை ஷா ஆலம் மாநகர்  மன்றம் வழங்கியது.

இம்மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இங்குள்ள செக்சன் 31, டேவான் லிப்பாரிசில் வர்த்தக அனுமதி விண்ணப்ப முகப்பிடம் திறக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு அந்த தற்காலிக லைசென்ஸ் வழங்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

செக்சன் 26,27,28,31 மற்றும் 35 ஆகிய பகுதிகளில் வர்த்தகம் புரிவதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இப்பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி கோருவோரின் வசதிக்காக அந்த  முகப்பிடம் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வணிகர்கள் சட்டப்பூர்மான முறையில் வர்த்தகம் புரிவதை உறுதி செய்வதிலும் கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கலை தீர்க்க உதவுவதிலும் மாநகர் மன்றத்திற்கு உள்ள கடப்பாட்டை இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஷா ஆலம் முழுவதும் 808 வர்த்தக விண்ணப்பங்களுக்கு மாநகர் மன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :