EVENTMEDIA STATEMENTSELANGOR

ஜாலான் யுனிவர்சிட்டிக்கு அரச பேராசிரியர் உங்கு அஜிஸ் பெயர்

ஷா ஆலம், ஜன 2– பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஜாலான் யுனிவர்சிட்டிக்கு ஜாலான் புரோப். டிராஜா உங்கு அஜிஸ் என பெயர் மாற்றம் செய்வதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக சிலாங்கூர் அரச அலுவலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

கல்வித் துறைக்கும் மலாய் சமூகத்தின் பொருளாதாரத்திற்கும் அரச பேராசிரியர் உங்கு அஜிஸ் ஆற்றிய பங்கினை அங்கீகரிக்கும் வகையில் அந்த பெருமகனாரின் பெயரை அச்சாலைக்கு சூட்ட சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று முக நூல் வழி வெளியிட்டப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாலை மலாயா பல்கலைக்கழகம், அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் மாஹ்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நுழைவாயிலாக உள்ள காரணத்தால் அச்சாலைக்கு அரச பேராசிரியர் உங்கு அஜிசின் பெயரை சூட்டுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவ்வறிக்கை விளக்கியது.

பேராசிரியர் உங்கு அஜிஸ் கடந்த 1952 முதல் 1961 வரை மலாயா பல்கலைக்கழகத்தில் (சிங்கப்பூர்) விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தின் (மலேசியா) பேராசிரியராகவும் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறை தலைவராகவும் 1962 முதல் 1965 வரை  பொறுப்பு வகித்தார்.

இந்த பெயர் மாற்றம் தொடர்பான  தனது எண்ணத்தை வெளியிடுவதற்காக உங்கு அஜிசின் புதல்வியான டான்ஸ்ரீ ஜெத்தி அக்தார் அஜிசை சுல்தான் முன்னதாகச் சந்தித்தார்.

பெட்டாலிங் ஜெயாவையும் கோலாலம்பூரையும் இணைக்கும் 3.2 கிலோமீட்ட்டர் நீளம் கொண்ட இந்த சாலை கடந்த 1960ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது இரு வழிச் சாலை இதுவாகும்.

 

 


Pengarang :