ECONOMYNATIONAL

மாநில எல்லை கடப்பதை  ஒத்தி வைக்க சுகாதார அமைச்சு பரிந்துரை

புத்ரா ஜெயா, ஏப் 15–  கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான நடப்பு நிலவரம் கவலையளிக்கும் வகையில் உள்ளதால் நோன்பு பெருநாளை கொண்டாடும் நோக்கில் பொதுமக்கள் மாநில எல்லைகளைக் கடப்பதை ஒத்திவைக்க சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிப்பதை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

நாட்டிலுள்ள பல மாநிலங்களில் தற்போது நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சீரற்ற நிலையிலும் உள்ளது. மேலும், தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டமும் இன்னும் முழுமை பெறாத நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றர் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 1,767 ஆக இருந்த கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை நேற்று 1,889ஆக உயர்ந்தது.

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்தளவையும் பெற்றுக் கொண்டவர்கள்  மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிக்கும் சாத்தியம் உள்ளதா? என்ற கேள்விக்கு, இவ்விவகாரம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவிலுள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையதின் கருத்தைப் பெறுவதற்கு தாங்கள் காத்திருப்பதாக ஆடாம் பாபா பதிலளித்தார்.

இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்கள் மாநில எல்லையை கடப்பதற்கு அனுமதிப்பதற்கு முன்னர் அவ்விரு அமைப்புகளிடமிருந்தும் கருத்தைப் பெற வேண்டியுள்ளது என்றார் அவர்.


Pengarang :