ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 சோதனை சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக ஸ்கேன் சாதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மே 24- கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலியின் பார் குறியீட்டை ஸ்கேன் செய்யும் சாதனங்களின் எண்ணிக்கையை மாநில அரசு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் வழி ஆண்டிஜென் ஆர்.டி.கே. ஏ.ஜி. சாதனத்தின் வழி சோதனைக்கான மாதிரிகளை எடுக்கும் பணியை எளிதாக்க முடியும் என்பதோடு சோதனைக்காக வந்தவர்கள் அதிக  நேரம் காத்திருக்கும் சூழலையும் தவிர்க்க முடியும் என்று ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

தற்போது சோதனை மையங்களில் ஒரே ஸ்கேன் கருவி மட்டுமே உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்றார் அவர்.

ஆகவே, சோதனை மையங்களில் நெரிசலைத் தவிர்ப்பதற்கும் பொதுமக்கள் விரைவாக சோதனைகளை முடிப்பதற்கும் ஏதுவாக இவ்விவகாரம் மீது மாநில அரசு உரிய கவனம் செலுத்தும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள கம்போங் லிண்டோங்கான் எம்.பி.பி.ஜே மண்டபத்தில் நடைபெற்ற இலவச பரிசோதனை இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :