ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிப்பாங், சுங்கை லீனா தோட்ட மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ரோணி லியு,  உணவு கூடை  வழங்கினார்

சிப்பாங், ஜூன் 26- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட சிப்பாங் வட்டாரத்தில் உள்ள சிப்பாங் தோட்டம் மற்றும் சுங்கை லீனா தோட்டத்தை சேர்ந்த 44 குடும்பங்களுக்கு  சுங்கை பீலேக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோணி லியு மற்றும்  சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்  சிவக்குமார் பெரியசாமி  ஆகியோரின் ஏற்பாட்டில் உணவு கூடைகள்  கடந்த 24ஆம் தேதி வழங்கப்பட்டன.

உள்ளூர் தொழிலாளர்களில் அதிகம் இந்தியர்களைக் கொண்டுள்ள  இவ்விரு தோட்டங்களிலும், வாழும் இந்திய மற்றும் மலாய்க்கார குடும்பங்கள்  பொது முடக்கம் காரணமாக எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு  இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்படுவதாக சிவா சொன்னார்.

நோய்ப் பரவல் அச்சம் காரணமாக தோட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிப் பொருள்களை வழங்க தோட்டம் நிர்வாகம்  எங்களுக்கு  அனுமதி வழங்காததால், உதவிப்பொருள்களை தோட்ட மக்களுக்கு  விநியோகிக்கும்  பொறுப்பை தோட்ட நிர்வாகத்தினரே ஏற்றுக்கொண்டனர்.  

இந்த கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்த ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் தோட்ட நிர்வாகி ரோஸ்மாடி தங்களிடம் கூறியதாக சிவா குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிப்பாங் வட்டாரத்தில்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்  அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு   உதவ தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர்  சொன்னார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் பொருள்களை வாங்க வழி இல்லாமல்  இருப்போருக்கு உதவும் வகையில் மளிகைக் பொருள்களை உரிய பாதுகாப்புடன் நாங்கள்  அவர்களின் வீடுகளுக்கு கொண்டுச் சென்று சேர்ப்போம் என்றார் அவர்.

 


Pengarang :