ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்

கோலாலம்பூர், ஆக 3- நாடாளுமன்றத்தில் நுழையும் நோக்கில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நேற்று நாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நேற்று காலை 9.50 அளவில் மெர்டேக்கா சதுக்கத்திலிருந்து நாடாளுமன்றக் கட்டிடம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகின் யாசின் நிர்வாகத்தை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவுபடி அவசரகாலச் சட்ட ரத்து தொடர்பான விவகாரம்  நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்தது. எனினும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் காரணம் காட்டி அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மெர்டேக்கா சதுக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களவை சபாநாயகர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதோடு பிரதமராக பதவி வகிப்பதற்கான தகுதியை இழந்து விட்ட மொகிடின் யாசினை காப்பாற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் பிரதமரும் பெஜூவாங் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.

உறுப்பினர்கள் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்காக எஃப்.ஆர்.யு. எனப்படும் மத்திய சேமப்படையினர் சாலையில் அரண் அமைத்திருந்தனர்.

காலை 11.00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் களைந்து சென்றனர். இந்த பேரணியில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டாக அன்வார் கூறினார்.

 


Pengarang :