ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKANSELANGOR

90  விழுக்காட்டு இளையோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர்

கோலாலம்பூர், டிச 6- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றதன் வழி மலேசியா முக்கியமான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் சொன்னார்.

பன்னிரண்டு முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியதன் வழி நாம் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளோம். மூத்த குடிமக்களும் தயார் நிலையில் உள்ள தடுப்பூசிகளை விரைந்து செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு 11.59 மணி வரை மொத்தம் 28 லட்சத்து 30 ஆயிரத்து 449 இளையோர் அல்லது 90 விழுக்காட்டினர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருந்தனர்.

மேலும் 27 லட்சத்து 21 ஆயிரத்து 784 பேர் அல்லது 86.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர பெரியவர்களில் 97.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 055 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்ட வேளையில் மேலும் 98.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 49 ஆயிரத்து 440 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, நேற்று 54,517 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 1,713 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 2,605 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 50,375 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சத்து 91 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :