ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

செலாயாங், அம்பாங் ஜெயாவில் நிலச் சரிவை சரி செய்ய 4.6 கோடி வெள்ளி தேவை- மந்திரி புசார்

செலாயாங், டிச 30- செலாயாங் மற்றும் அம்பாங் ஜெயாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கு 4 கோடியே 60 லட்சம் வெள்ளி தேவைப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

செலாயாங் நகராண்மைக்கழகம் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்திற்குட்பட்ட 11 பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடுமையான பாதிப்பை எதிர்நோக்கிய பகுதிகளில் தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்றாகும். இங்கு மலைச்சாரைலை சீர் படுத்த இரண்டு மாதம் பிடிக்கும் என்பதோடு அதற்கு 16 லட்சம் வெள்ளியும் செலவாகும் என அவர் குறிப்பிட்டார்.

நிலச் சரிவு ஏற்பட்ட பெரும்பாலான நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவையாகும். இரு சம்பவங்கள் தனியார் நிலங்களில் நிகழ்ந்திருந்தாலும் அவற்றுக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இங்கு காலை இங்குள்ள தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த குடியிருப்பைச் சேர்ந்த 38 குடும்பத்தினர் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளியைப் பெற்ற வேளையில் ஜக்கத் வாயிலாகவும் உதவி பெற்றனர் என்றார் அவர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் வெள்ள பாதிப்பு பிரிவில் சேராவிட்டாலும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக இவர்களுக்கும் 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.


Pengarang :