ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து 78,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், ஜன 8- மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல்  இதுவரை 78,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

அவற்றில் 48,000 டன் குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனமும் எஞ்சிய குப்பைகளை ஊராட்சி மன்றங்கள் மற்றும் இதர துறைகளும் அகற்றின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி  நேற்றிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது கால்வாய்களை துப்புரவு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

தங்கள் வீடுகளில் இருக்கும் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி பொது மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அவற்றை நாங்கள் அகற்றி விடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் டிவில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த குப்பை அகற்றும் பணியில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்த கேள்விக்கு, வெள்ளம் காரணமாக ரோரோ எனப்படும் குப்பைத் தோம்புகளை ஏற்றும் லோரிகளும் 10 விழுக்காட்டு குப்பை அகற்றும் லோரிகளும் சேதமடைந்தது தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் தினசரி 450 லோரிகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் விரைந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முழுவீச்சில் மேற்கொண்டோம் என்றார் அவர்.

உதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்காக பொதுமக்களிடம் தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பட்டார்.


Pengarang :