ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

27,383 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.

ஷா ஆலம், ஜன 12- மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று வரை 27,383 குடும்பங்களுக்கு 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்த கிள்ளான், கோல லங்காட், சிப்பாங், உலு லங்காட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக  அதாவது 8,373 பேர் நிவாரண நிதியைப் பெற்ற வேளையில் அதற்கு அடுத்து உலு லங்காட்டில் 6,477 பேருக்கும் கிள்ளானில் 6,067 பேருக்கும் நிதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும் சிப்பாங்கில் 2,356 பேரும் கோல லங்காட்டில் 1,890 பேரும் கோல சிலாங்கூரில் 1,548 பேரும் உலு சிலாங்கூரில் 92 பேரும் சபாக் பெர்ணமில் 35 பேரும் இந்த உதவித் தொகையை பெற்றுள்ளனர் என்றார் அவர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் பங்கிட் சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.


Pengarang :