ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

காவடிக்கு தடை- அரசு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும்

ஷா ஆலம், ஜன 19- தைப்பூசத்தின் போது காவடி எடுப்பதற்கு தடை விதிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் முன்கூட்டியே வெளியிட்டிருக்க வேண்டும் என்று பக்தர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் அறிவிப்பின் மூலம் காவடி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு தயாரான பக்தர்களுக்கு அரசாங்கம் அநீதி இழைத்து விட்டதாக பக்தர்களில் ஒருவரான எஸ். ஞானேஸ்வரன் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அமல்செய்யப்பட்ட எஸ்.ஒ.பி. விதிகளை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும் தைப்பூச நிபந்தனைகள் குறித்து அரசாங்கமோ அல்லது ஆலய நிர்வாகமோ முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

காவடி எடுப்பதற்கு 48 நாள் விரதமிருந்த பக்தர்கள் மற்றும் முன்கூட்டியே பெரும் தொகையை முதலீடு செய்த வியாபாரிகளின் நிலைதான் பரிதாபத்தித்திற்குரியது. காவடி ஊர்வலம் இல்லாத காரணத்தால் இவ்வாண்டு தைப்பூசம் முழுமையடையவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் டிவி யூடியூப் வாயிலாக ஒளியேறிய “தைப்பூசத்தின் பொருள்“ என்ற தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களும் தங்களின் நம்பிக்கேற்ப சமய நிகழ்வுகளை வழக்கம் போல் நடத்துவதற்கு ஏதுவாக கோவிட்-19 பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :