ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

300 வணிகர்களுக்கு கோஹிஜ்ரா கூட்டுறவுக் கழகம் ஏற்பாட்டில் வர்த்தக பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 25- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  சுமார் 300 சிறு வணிகர்களுக்கு கடந்த மாதம் முதல் இதுவரை 100,000 வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்களை கோஹிஜ்ரா எனப்படும் கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் கூட்டுறவுக் கழகம் வழங்கியுள்ளது.

அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் கிடைக்கப் பெற்ற அந்த வர்த்தக உபகரணங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அக்கூட்டுறவுக் கழகத்தின் தலைமை நிர்வாகி முகமது சுக்ரி இஸ்மாயில் கூறினார்.

தற்காலிக கூடாரங்கள், சமையல் அடுப்புகள்,  சோறு மற்றும் நீரை சேகரித்து வைக்கும் கலங்கள் விளக்குகள் உள்ளிட்ட பொருள்கள் அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் காரணமாக வர்த்தக உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை இழந்த சிறு வியாபாரிகளுக்கு உதவுவதற்கு பலர் முன்வந்துள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள கோஹிஜ்ரா தலைமையகத்தில் நடைபெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஷா ஆலம் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் பாசார் மாலாம் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 43 சிறு வியாபாரிகள் இந்த உதவிப் பொருள்களை இன்று  பெற்றனர்.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 300 முதல் 400 சிறு வியாபாரிகளுக்கு உதவிப் பொருள்களை வழங்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :