ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இ.சி.ஆர்.எல்., எம்.ஆர்.டி.3 திட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்- சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 14– கிழக்குக் கரை இரயில் தடத் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) மற்றும் இலகு ரக ரயில் திட்டம் 3 (எம்.ஆர்.டி.3) ஆகியவை பொது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரிடரை அல்லது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்காமலிருப்பது உறுதி  செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அதன் அமலாக்கத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

சமூகவியல் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைக் கருத்தில் கொண்டு அவ்விரு திட்டங்கள் மீது மிக அணுக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.  சமூகவியல் மற்றும் சுற்றுச் சூழல் அடுத்த தலைமுறையின் சுபிட்சத்திற்குப் பாதகத்தைக் கொண்டு வராமலிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று இங்கு 14 மாநில சட்டமன்றத்தின் 5 ஆம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தை வடக்கு தடத்தில் மேற்கொள்ளும் பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக் கொண்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதி கூறியிருந்தார்.

நாற்பது கிலோ மீட்டர் தொலைவை உட்படுத்திய எம்.ஆர்.டி.3 திட்டம் ஜாலான் டூத்தா, செத்தியாவங்சா, பண்டான் இண்டா, சாலாச் செலத்தான், பண்டார் மலேசியா, கிறிஞ்சி வழியாக மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :