ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் வெறிநாய்க்கடி சம்பவம் பதிவு- ஆடவர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஏப் 10- பெட்டாலிங்கில் உள்ள வீடொன்றில் கடந்த மாதம் 10 ஆம் தேதி இறந்து கிடக்கக் காணப்பட்ட ஆடவர் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கூறியது.

இம்மாதம் 4 ஆம் தேதி சவப்பரிசோதனையில் இந்த அவ்வாடவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அவரது உடல் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மூளையின் மாதிரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கூட சோதனையில் வெறிநாய்க்கடி நோய்க்கான வைரஸ் அவரது உடலில் இருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

அந்த ஆடவரின் நடமாட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்  இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அந்த குடியிருப்பு பகுதியில் நடமாடியது தெரிய வந்தது என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாடவர் உடலில் நோய்த் தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிந்து வருகிறோம். வெறிநாய்க்கடிக்கான அறிகுறியோ அடையாளமோ அவரிடம் காணப்படவில்லை என்றார் அவர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இம்மாதம் 7 ஆம் தேதி முதல் சாலைகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களை அகற்றுவது உள்ளிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார இலாகா கால்நடை சேவைத்துறை, ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :