ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் மேலும் 100,000 பேருக்கு இலவச குடிநீர் சலுகை- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 31- சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு லட்சம் பேர் 20 கனமீட்டர் இலவச குடிநீர் சலுகையைப் பெறுவர். இந்த திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி வெள்ளி செலவை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.

இந்த இலவச குடிநீர் சலுகையைப் பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்படும் காரணத்தால் இத்திட்டத்தின் வழி பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் வழி அதிகமானோர் பயனடைவதற்கு ஏதுவாக வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையை வரும் அக்டோபர்  மாதம் தொடங்கி புதிதாக மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

நேற்றிரவு இங்குள்ள டத்தாரான் மெர்டேக்கா ஷா ஆலமில் மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்கிம் டாருள் ஏசான் திட்டத்தின் கீழ் தற்போது 237,000 பயனீட்டாளர்கள் இலவச குடிநீர் சலுகையைப் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்ய மாநில மக்களுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார ர்கள் மலேசிய பிரஜைகளாகவும் தனி மீட்டர் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு பயனீட்டாளர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவார்.

இந்த இலவச நீர் விநியோகத் திட்டம் தொடர்பான மேல் விபரங்களை https://www.airselangor.com/residen…skim-air-darul-ehsan/ என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :