ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை ராமால் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களுக்கு  நீர் அழுத்த கருவிகள் விநியோகம்

ஷா ஆலம் செப் 28- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை ராமால், கம்போங் பாங்கியைச் சேர்ந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் வாட்டர் ஜெட் எனப்படும் நீர் அழுத்த கருவிகள் வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்களை வாங்குவதற்கு சட்டமன்றத் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 20,000 வெள்ளி செலவிடப்பட்டதாக சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் கூறினார்.

இப்பகுதி அடிக்கடி திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்படுவதால் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு உதவும் நோக்கில் இந்த கருவிகளை தாங்கள் வழங்கியதாக அவர் சொன்னார்.

இப்பகுதியிலுள்ள ஆறுகள் மற்றும் நீர் சேகரிப்பு குளங்களை அடிக்கடி சுத்தம் செய்து வந்த போதிலும் வெள்ளப் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது என்று அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் வெள்ளத் தடுப்பணை கட்டுவதற்கு  மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறைக்கு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படவுள்ளதாக அறிகிறோம். வெள்ளப் பிரச்னை மீண்டும் ஏற்படாதிருக்க இந்த திட்டத்தை சம்பந்தப்பட்டத் தரப்பினர் விரைந்து மேற்கொள்வர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


Pengarang :