ECONOMYPBT

இணையத்தில் வைரலான “அக்கா கடை“ சங்கீதாவுக்கு சித்தம் உதவி

ஷா ஆலம், ஏப் 23- இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாலையோர “அக்கா கடை“ நாசி லெமாக் வியாபாரியான திருமதி எம்.சங்கீதாவுக்கு “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

ஸ்ரீ கெம்பங்கான், புஞ்சா ஜாலில் பகுதியில் சாலையோரத்தில் உணவு வியாபாரம் செய்து வரும் இந்த பெண்மணியை அண்மையில் சந்தித்த பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி தீபன் சுப்பிரமணியம், சித்தம் நிர்வாகி கென்னத் சேம், நகராண்மைக் கழக உறுப்பினர் எம், அன்பரசன் ஆகியோர் அவருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக வாக்குறுதியளித்தனர்.

சங்கீதாவுக்கு வியாபார லைசென்ஸ் பெறுவது, வர்த்தக உபகரணங்களை வழங்குவது, டைபாய்டு தடுப்பூசி செலுத்துவது, உணவுகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளை பெறுவது ஆகிய உதவிகளை சிலாங்கூர் அரசின் சித்தம் அமைப்பின் வாயிலாக வழங்க தாங்கள் முன்வந்துள்ளதாக கென்னத் கூறினார்.

அம்மாதுவுக்கு மலேசிய நிறுவன ஆணையத்திடமிருந்து வர்த்தக லைசென்ஸ் கிடைத்துள்ளது. அதோடு மட்டுமின்றி அவர் வர்த்தகத்தை சீராகவும் முறையாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டிலான ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் வருமானத் திட்டத்தின் கீழ் வெண்டிங் இயந்திரத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்ய தீபன் முன்வந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 13ஆம் ஆண்டுகளாக இப்பகுதியில் நாசி லெமாக், பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வியாபாரம் செய்து வரும் 34 வயதான சங்கீதா அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் பெரிதும் பிரபலமானார். அவரின் சாலையோரக் கடையின் முன் பெரும் எண்ணிக்கையிலானோர் வரிசை பிடித்து  நிற்கும் காட்சிகள் பரவலாக வைரலாகின பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


Pengarang :