ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

இந்திய சமூகத்திற்கான திறன் பயிற்சித் திட்டங்களில் சித்தம்-மித்ரா ஒத்துழைப்பு குறித்து ரோட்சியா- டத்தோ ரமணன் பேச்சு

புத்ரா ஜெயா, மே 29- குறைந்த வருமானம் பெறும் இந்திய சமூகத்தின் பி40 தரப்பினருக்கு வர்த்தக மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் திட்டங்களை மேலும் விரிவான அளவில் மேற்கொள்வதற்காக மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் மாநில அரசு ஆர்வம் கொண்டுள்ளது.

இந்நோக்கத்தின் அடிப்படையில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சித்தம் வாரியத் தலைவருமான ரோட்சியா இஸ்மாயில் மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ ரமணன் இராமகிருஷ்ணனுடன் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு நடத்தினார்.

புத்ரா ஜெயாவிலுள்ள மித்ரா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சித்தம் நிர்வாக எஸ்.கென்னத் சேம் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சித்தம் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி, திறன் மற்றும் தயாரிப்பு பயிற்சி, குரோ எனப்படும் வர்த்தக வழிகாட்டிப் பயிற்சி, கிரான் எனப்படும் வர்த்தக உபகரண உதவி ஆகிய நான்கு திட்டங்களையும் மேலும் விரிவான அளவில் மேற்கொள்வது தொடர்பில் ரோட்சியா மற்றும் டத்தோ ரமணன் விவாதித்ததாக கென்னத் கூறினார்.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சமையல், முக ஒப்பனை, மணப்பெண் அலங்காரம் போன்ற தொழில்களில் பயிற்சிகளை வழங்கி அவர்கள் உபரி வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு தொகுதியிலும் இரு பயிற்சித் திட்டங்களை சித்தம் தற்போது மேற்கொண்டு வருகிறது. 

மேலும் அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டங்களின் எண்ணிக்கையை நான்காக அதிகரிப்பதில் மித்ராவின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம் என் அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தை இலக்காக கொண்டு மாநில அரசு அமல்படுத்தி வரும் சித்தம் திட்டங்கள் குறித்த விளக்கத்தை மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்த டத்தோ ரமணன், இத்திட்ட அமலாக்கத்தில் சித்தம் அமைப்புடன் ஒத்துழைக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

பின்னர் நடைபெறவிருக்கும் அடுத்தக் கட்ட சந்திப்புகளுக்குப் பின்னர் இந்த ஒத்துழைப்பு தொடர்பான அம்சங்கள் இறுதி செய்யப்படும். இந்திய சமூகத்தின் மேம்பாட்டை உறுதி செய்வதில் முழு கடப்பாட்டை வெளிப்படுத்திய டத்தோ ரமணன் மற்றும் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் இந்திய சமூக நலன் கருதி இச்சந்திப்பை நடத்திய ரோட்சியா ஆகியோருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கென்னத் தெரிவித்தார்.


Pengarang :