ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

மூன்று ஆண்டுகளில் மாநகர் அந்தஸ்தை பெற அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இலக்கு

அம்பாங் ஜெயா, ஜூலை 16- அடுத்த மூன்று ஆண்டுகளில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தை மாநகராக தரம் உயர்த்த சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் மக்களின் தேவையை ஈடு செய்யக்கூடிய நிலையான வாழ்வியல் கொள்கையை வரைவது உள்பட நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த ஊராட்சி மன்றம் நிறைவு செய்வது அவசியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அம்பாங் நகராண்மைக் கழகத்தின் அடைவு நிலை மற்றும் வசதிகள் ரீதியாகப் பார்த்தால் அது மாநகர் அந்தஸ்தைப் பெறுவதற்குரிய அனைத்து பகுதிகளையும் கொண்டுள்ளது. இன்னும், மாநகர் அந்தஸ்துடைய நகரை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி வளத்தை அது கொண்டிருப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மாநகர மன்றத்துடன் ஒப்பிடுகையில் அம்பாங் ஜெயா, நகராண்மைக் கழக அந்தஸ்தை மட்டுமே கொண்டிருந்தாலும் இதன் தரம் அதிக இடைவெளியைக் கொண்டிருப்பதை நாம் காண விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் பல செயல் திட்டங்களை வரைந்துள்ளது. உயர் தரத்திலான தொழில் துறைகளை இந்த பகுதிக்கு  கொண்டு வருவதும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற அம்பாங் ஜெயா நைட் ரன் எனும் ஓட்டப்பந்தய நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அடுத்த சில ஆண்டுகளில் அமல்படுத்தக் கூடிய உச்சக்கட்ட மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலாக முதலாவது சிலாங்கூர் திட்டம் விளங்குகிறது என்று அமிருடின் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :