ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் பிரசாரம் பிறரை அவமதிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட வேண்டும்-  பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 22- மாநிலத் தேர்தலின் போது மேற்கொள்ளப்படும் பிறரை அவமதிக்கும் மற்றும் வசை பாடும் பிரசாரத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டாம் என பொது மக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக கொண்டுள்ளார்.

பண்பாடும் ஒழுக்க நெறிகளும் இல்லாத திசையை நோக்கி பிரசாரம் செல்வதை காண முடிவதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்

இம்முறை நடைபெறும் மாநிலத் தேர்தல்களில் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூறிக் கொள்ளும் தலைவர்கள் உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் அவமதிக்கும் மற்றும் வசைபாடும் தேர்தல் பிரசாரங்களுக்கு தாமும் பலிகடா ஆகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

என்னையும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களையும் வசைபாடும் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை, மக்களுக்கு உதவும் மற்றும் நாட்டை மேம்படுத்தும் எங்களின் நோக்கத்தை ஒருபோதும் சிதைத்து விடாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் இந்தச் செயல்களை மக்கள் மதிப்பீடு செய்து வருகிறார்கள். வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரம் என்பது பிறரை அவமதிப்பதற்கான களம் அல்ல- மாறாக, பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கான இடமாகும் என்றார் அவர்.

மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பண்பு மற்றும் உயர்நெறிக்கான எல்லைகளைக் கடந்து குறிப்பாக எனக்கெதிரான  தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன என அவர் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் தாம் இலக்காக கொள்ளப்படுவதை  ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், எனினும், இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டவர்கள் எனக் கூறிக் கொள்ளும் கட்சியினர் செய்யும் பிரசாரம் மறைந்த டான்ஸ்ரீ நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மற்றும் டத்தோ பாட்சில் நோர் போன்றத் தலைவர்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :