ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு 1.3 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 8- சிலாங்கூர் மாநில அரசின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்தை உட்படுத்திய பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒரு கோடியே முப்பது லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த வரவு செலவுத் திட்டத்தில் மாநிலத்தின் அனைத்து நிலையிலான மக்களின் நலனையும் உட்படுத்திய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை தமிழ்ப்பள்ளி, ஆலயம், கல்வி உதவிநிதி, தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக உதவி என பல்வேறு திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்திய சமூகத்திற்கான திட்டங்கள்

  • தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 50 லட்சம் வெள்ளி
  • இந்திய மாணவர்களுக்கான பேருந்து கட்டணம்
  • மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோரின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு உதவி நிதி
  • இந்திய மாணவர்களின் அறிவியல், புத்தாக்கத் திறன் நடவடிக்கைளுக்கு 20 லட்சம் வெள்ளி
  • இந்து, சீக்கிய ஆலயங்களுக்கு 20 லட்சம் வெள்ளி
  • இந்திய தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி
  • இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு 5 லட்சம் வெள்ளி
  • தீபாவளி பெருநாள் காலத்தின் போது வழங்கப்படும் பற்றுச் சீட்டுகளுக்காக 20 லட்சம் வெள்ளி

சிலாங்கூர் மாநில அரசு இந்திய சமூகத்தை ஒரு  போதும் கைவிட்டதில்லை என்பதை இந்த ஒரு கோடியே முப்பது லட்சம் வெள்ளி மதிப்பிலான சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் புலப்படுத்துகின்றன என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

இது தவிர்த்து அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய பல்வேறு நலத் திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

4,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறுவோருக்கு இலவச குடிநீர் விநியோக திட்டம், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பிறந்தநாள் பற்றுச் சீட்டு, மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் இல்லத்தரசிகளுக்கு கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையர் அட்டைத்  திட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்


Pengarang :