ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

60 விழுக்காட்டு நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னை முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீர்க்கப்பட்டது- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தகவல்

ஷா ஆலம், நவ 26- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அறுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னை முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீர்க்கப்பட்டதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஆகிய தரப்பினர் 20 நீர் தூய்மைக் கேட்டு சம்பவங்களை அடையாளம் கண்டதாக அவர் சொன்னார்.

அவற்றில் 13 நீர் மாசுபாடு சம்பவங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்படும் சூழல் ஏற்படாத வண்ணம் தீர்வு காணப்பட்டது. எனினும், ஏழு சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது என்றார் அவர்.

அந்த 20 தூய்மைக்கேட்டு சம்பவங்களில் ஒன்பது நீரில் எண்ணெய் கலந்ததால் ஏற்பட்டதாகும். ஏழு சம்பவங்கள் நீரில் காணப்பட்ட துர்நாற்றப் பிரச்னை சம்பந்தப்பட்டதாகும். மூன்று சம்பவங்கள் தொழிலியல் கழிவுகள் சம்பந்தப்பட்டவை என்பதோடு மேலும் ஒரு சம்பவம் கலங்கிய நீரினால் உண்டானது என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அண்மைய நாட்களில் பல நீர் மாசுபாடு சம்பவங்கள் முன்னதாக கண்டறியப்பட்டு சுத்திகரிப்பு மையங்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள மாநில சட்டமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செமினியில் நீர் விநியோக பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இதனைச் சொன்னார்.


Pengarang :