ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல் குறியீடு பட்டியலில் மலேசியா  57 இடத்திற்கு தள்ளப்பட்டது

கோலாலம்பூர், ஜன 28– டிரான்ஸ்பரசி இண்டர்நேஷனல் எனப்படும் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு கூட்டணியின் 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் குறியீட்டு பட்டியலில் (சி.பி.ஐ.) மலேசியா 180 நாடுகள் மத்தியில் ஆறு இடங்கள் பின்தங்கி 57வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஊழல் குறியீட்டு பட்டியல் அடைவு நிலையில் மலேசியாவின் புள்ளிகள் 100க்கு 51 என சரிவு கண்டுள்ளதாக மலேசிய டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் தலைவர் டாக்டர் முகமது மோஹன் கூறினார்.

நாம் இரண்டு புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருக்கலாம். அது தரவு ரீதியில் முக்கியத்துமற்றதாகவும் இருக்கலாம். ஆனால் புள்ளி மற்றும் தர வரிசை அடிப்படையில் நாம் வீழ்ச்சி கண்டது கவலையளிக்கும் விஷயமாகும். எனினும், ருவாண்டா, போலந்து உள்ளிட்ட  நாடுகளை விட இந்த அடைவு நிலை சிறப்பானதுதான் என்று அவர் கூறினார்.

ஒரு நாட்டின் பொதுச் சேவைத் துறையில் காணப்படும் ஊழலின் அளவு தொடர்பில் மேற்கொள்ளப்படும் 13 ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. புள்ளிகள்  மற்றும் தர வரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

உலகில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் தலா 88 புள்ளிகளுடன் டென்மார்க் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. சிரியா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகள் முறையே 14,12 மற்றும் 12 புள்ளிகளுடன் ஆக கடைசி இடங்களில் உள்ளன என்று முகமது மோஹன் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூர் முதலிடத்திலும் புருணை (35) மற்றும் மலேசியா (57) அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. ஊழலற்ற பத்து நாடுகள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

மலேசியாவைப் பொறுத்த வரை  அரசு நிர்வாக சீர்திருத்தம் முடக்கம் கண்டது, முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் வழக்கிலிருந்து அல்லாமல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டது, மக்கள் நலன் சார்ந்த விவகாங்களில் தகவல் அறியும் வாய்ப்பு மறுக்கப்படுவது, ஹலால் அல்லாத உணவு ஊழல், அரசு அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மந்தமான முன்னேற்றம், பொது கொள்முதல் மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் ஆகியவை சி.பி.ஐ.பட்டியலில் பின் தள்ளப் பட்டதற்கு காரணமாக விளங்குகிறது என அவ விளக்கினார்.


Pengarang :