ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்றத் தொகுதி சார்பில் நிவாரண உதவி

கிள்ளான், ஜன 14- அண்மையில் பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

மெந்தகாப், தெமர்லோ, லஞ்சாங், காராக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணி செந்தோசா சட்டமன்றத் தொகுதி மற்றும் கோத்தா ராஜா தொகுதியின் சிறப்பு தன்னார்வலர் பணிக்குழுவின்  முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

தெமர்லோ கெஅடிலான் தொகுதியின் ஒருங்கிணைப்பில்  அப்பகுதியைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலோர் வெள்ளத்தில் உடைமைகளை முற்றிலுமாக இழந்து  உடுத்திய உடையுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது வேதனையான விஷயமாகும்.

இவர்களுக்கு சமையல் அடுப்பு, மெத்தை, தலையணை, உணவு மற்றும் பானங்கள், உடைகள், சோப்பு உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

மெந்தகாப் மற்றும் லஞ்சாங் ஆகிய பகுதிகளில் உதவிப் பொருள்களை விநியோகம் செய்தப் பின்னர் அடுத்த கட்டமாக காராக் வட்டாரத்தில் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கும் இப்பணிக்குழு உதவி நல்கியது.

சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி  துரைராஜூ அந்த உதவிப் பொருள்களை பெற்றுக் கொண்டார். 

வெள்ளத்தால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ள அம்மாநில மக்களின் சுமையைக் குறைப்பதில் தங்களின் இந்த சிறு உதவி ஓரளவு உதவி புரியும் என்று நம்புவதாக குணராஜ் கூறினார்.

இந்த நிவாரண உதவிப் பொருள் திட்டம் வெற்றியடைவதில் உதவிய பொது அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் தனி நபர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :