ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

நகராண்மைக் கழகம் எச்சரிக்கை -குப்பைத் தொட்டி வைக்காத கடைகளுக்கு 1,000 வெள்ளி அபராதம்

கிள்ளான், பிப் 23- குப்பைத் தொட்டி வைத்திராத கடைகளுக்கு ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது.

வர்த்தக மையங்களில் தூய்மையின்மைப் பிரச்சனை தொடர்வதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நகராண்மைக் கழகத்தின் சுற்றுச்சூழல் சேவை பிரிவு இயக்குநர் ஜைரிசால் அகமது ஜைனுடின் கூறினார்.

வர்த்தக மையங்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்பது லைசன்ஸ் விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய நிபந்தனையாகும். ஆகவே, அமலாக்க நடவடிக்கைகள் தவிர்த்து அடிக்கடி திடீர் சோதனைகளையும் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.

இத்தகைய குற்றங்களுக்கு ஊராட்சி மன்றங்களின் துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கடைகளில் குப்பைத் தொட்டிகளை வைக்கக் கோரும் அறிக்கை இம்மாதம் 18ஆம் தேதி அனைத்து வியாபாரிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்ற ஏழு நாட்களுக்குள் 240 கன மீட்டர் கொள்ளலவு கொண்ட மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியை வணிகர்கள் தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்

Pengarang :