MEDIA STATEMENTNATIONALPress Statements

நிர்ணயித்த தேதியில் தடுப்பூசி பெறத்தவறியவர்கள் மீது நடவடிக்கை- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 27– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்கூட்டியே தேதி நிர்ணயித்தவர்கள் நியாயமான காரணங்கள் இன்றி குறிப்பிட்ட தேதியில் வராத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசிகள் யாருக்கும் பயனின்றி விரயமாவதைத் தடுக்கும்  நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

திரவமயமாக்கப்பட்ட பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஆயுள் காலம் ஆறு மணி நேரம் மட்டும்தான் என்பதால் அதனை அடுத்த நாள் பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க முடியாது என்று அவர் சொன்னார்.

நாம் முழு தயார் நிலையில் இருக்கும் போது, தடுப்பூசியைப் பெற வேண்டியவர் வராவிட்டால் பொருள் வளமும் மனித வளமும் வீணாகி விடும் என்றார் அவர்.

வெளிநாடுகளில் தடுப்பூசி பெறுவதற்கான வரிசையை முந்திச் செல்வோருக்கு தண்டனை விதிக்கப்படுவதைப் போல் தடுப்பூசியைப் பெற வரத்தவறியவர்கள் மீதும் நாம் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு குறிப்பாக இரண்டாவது டோஸ் பெறுவதற்கு வர முடியாதவர்கள் குறைந்தது மூன்று தினங்களுக்கு முன்னரே தங்களிடம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கான புதிய  தேதியை நிர்ணயிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடைசி நேரத்தில் வருகையை ரத்து செய்தால் மாற்று வழியை ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். காரணம், அந்த தடுப்பூசியை வெறுமனே வீசிவிட முடியாது. ஆகவே, காத்திருப்போர் பட்டியிலில் உள்ளவர்களுக்கு அதனை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. தடுப்பூசியை இன்னும் பெறாத முன்களப் பணியாளர்களுக்கு குறிப்பாக மருத்துவப் பணியாளர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்.

 


Pengarang :