Press StatementsSELANGOR

முன்களப் பணியாளர்களுக்கு பிறகுதான் நான் தடுப்பூசி பெறுவேன்- சிலாங்கூர் சுல்தான் அறிவிப்பு

ஷா ஆலம், பிப் 27– அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட பின்னர்தான் தாம் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியுள்ளார்.

நோய்த்  தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளவர்களாக முன்களப் பணியாளர்கள் கருதப்படுவதால் தடுப்பூசித் திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது அவசியம் என்று அவர் சொன்னார்.

அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டப் பின்னர் அதிகாரிகள் நிர்ணயித்த எஸ்.ஒ.பி. நடைமுறைகளைப் பின்பற்றி நான் அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வேன் என அரச அலுவகத்தின் அதிகாரப்பூர்வ முகநூலில் அவர் தெரவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள அட்டவணையின்படி கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், தடுப்பூசி எதிர்ப்பு கும்பலின் பிரசாரங்களால் ஈர்க்கப்படக் கூடாது என்றும் நினைவுறுத்தினார்.

கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிரான நடவடிக்கைகள் பொறுப்பற்றவை என்பதோடு மார்க்க நெறிக்கும் முரணானவை என்று முன்னதாக சுல்தான் கூறியிருந்தார்.

இத்தகைய செயல்கள் சம்பந்தப்பட்டத் தரப்பினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :