ECONOMYPBTPENDIDIKANSELANGOR

மக்களுக்கு பயன்தரும் 20 திட்டங்கள்- கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி அமல்

ஷா ஆலம், பிப் 22- கோவிட்-19 பெருந்தொற்று  பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பொருளுதவி, பொருளாதார உதவி மற்றும் கல்வி உதவி ரூபத்தில் 20 திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

ஜனவரி மாதம் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் கடனுதவி ரத்து, உணவு உதவி, வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு, இலவச கல்வி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்திட்டங்களின் அமலாக்கம் தொடர்பான தரவுகளை ஸ்மார்ட் சிலாங்கூர் சி5ஐ ஒருங்கிணைந்த நடவடிக்கை மையம் (எஸ்.எஸ்.ஒ.சி.) வெளியிடும் என்று யுபென் எனப்படும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு கடந்த ஜனவரி 17ஆம் தேதி அறிவித்திருந்தது.

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் நடப்பு நிலவரங்களைக் கையாள்வதற்காக 75 லட்சம் வெள்ளி செலவில் எஸ்.எஸ்.ஒ.சி. மற்றும் சி.ஒ.இ.2. எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் மேம்பாட்டு மையம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

கடந்த ஒரு மாத காலத்தில் ஆறு திட்டங்கள் முழுமையாக அமலாக்கம் கண்டுள்ளன. 77 லட்சம் வெள்ளி  மதிப்பிலான கல்விக் கடன்களை ரத்து செய்தது, 16 லட்சம் வெள்ளி மதிப்பில் முன்களப் பணியாளர்களுக்கு இரு வாரங்களுக்கு உணவு உதவித் திட்டத்தை அமல் செய்தது ஆகியவையும் அதில் அடங்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டபடி 20 லட்சம் வெள்ளி உதவித் தொகை கடந்த மாதம் 25ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது.

2,365 பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான வாடகை தள்ளுபடி மற்றும் அடுத்த இரு மாதங்களுக்கு வாடகை ஒத்தி வைப்பு திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இந்நோக்கத்திற்காக 11 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டது.

இது தவிர, 450 விவேக வாடகை திட்ட பயனாளிகளுக்கு ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை ஒத்தி வைக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 50 வெள்ளியை உள்ளடக்கியிருந்தது.

கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலான அனைத்து உதவிகளும் மாநில அரசின் துணை நிறுவனங்கள், சமூக மையங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின்  சேவை மையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டதாக யுபென் விநியோக மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் முகமது ஹஸ்ருள் புர்ஹானுடின் கூறினார். 

மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலான இலக்கவியல், தொழில்முனைவோர் திட்டங்கள் தொடர்ந்து அமலாக்கம் கண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மூன்று பொருளாதார மீட்சித் திட்டங்களை கடந்தாண்டு அமல்படுத்திய மாநில அரசு, அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டில் கித்தா சிலாங்கூர் திட்டத்தை அறிவித்துள்ளது.


Pengarang :