ACTIVITIES AND ADSPBTSAINS & INOVASISELANGOR

இணையம் வாயிலாக அடிப்படை வர்த்தப் பயிற்சியைப் பெறுவீர்- தொழில்முனைவோருக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 7– இணையம் வாயிலாக நடத்தப்படும் அடிப்படை வர்த்தக பயிற்சியில் பங்கேற்கும்படி மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

‘பாடு‘ எனப்படும் தொழில்முனைவோர் இலக்கவியல் அடிப்படைத் திட்டத்தின் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தொழில்முனைவோரை இலக்கவியல் துறைக்கு இட்டுச் செல்லும்  நோக்கிலான இந்த புதிய திட்டத்தை   சிடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில  தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் இலக்கவியல் தளத்தை மையமாக  கொண்டுள்ளன. ஆகவே, மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் இலக்கவியல் வர்த்தக ஆற்றலை பெருக்கிக் கொள்வதற்குரிய தருணம் வந்துவிட்டது என்றார் அவர்.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு இன்னும் சில இடங்களே உள்ளன. ஆகவே விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள். வர்த்தகத்தில் இலக்கவியல் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குரிய வழிமுறைகளை அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் உங்களுக்கு வழங்குவர்  என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி கூகுள் ஸூம் தளத்தின் மூலம் நடைபெறும் எனக்கூறிய அவர், இதில் பங்கேற்பதற்கு நுழைவுக்கட்டணமாக 20 வெள்ளி வசூலிக்கப்படும் என்றார். ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :