ANTARABANGSASELANGOR

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 27– மக்களின் அன்றாடத் தேவைக்கு கடல் நீரை குடிநீராக மாற்றுவது உள்பட வேறு புதிய நீர் வளங்களை கண்டறியும் திட்டத்தை சிலாங்கூர்  மாநிலம் தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஆற்று நீர், ஹோராஸ் திட்டம் மற்றும் ஓ.ஆர்.எஸ். திட்டம் ஆகியவற்றின் மூலம் அடுத்த 40 ஆண்டுகளுக்கு மாநிலத்தின் நீர் தேவையை ஈடுகட்ட முடியும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்தின் நீர் தேவைக்கு  ஆற்று நீர் மற்றும் பெஸ்தாரி ஜெயாவில் மேற்கொள்ளப்படும் ஹோராஸ் மற்றும் ஒ.ஆர்.எஸ். திட்டங்களை தற்போதைக்கு சார்ந்திருக்க விரும்புகிறோம். 20 ஆண்டுகள் கழித்து புதிய நீர் வளங்களின் தேவை குறித்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றார் அவர்.

கடல் நீரை குடிநீராக மாற்றும் சாத்தியம் குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அப்பணிக்கு தேவையான கருவிகளை தயார் செய்வதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் அதிக செலவாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில்துறைக்கு தேவையான நீரை உற்பத்தி செய்யக்கூடிய நீர் மறுபயனீட்டு ஆலையை மேம்படுத்துவது தொடர்பில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கும் இண்டா வாட்டர் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :