ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

கோல லங்காட் செலாத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ- கீழறுப்புச் செயல் காரணமா?

கோல லங்காட், மார்ச் 2- கோல லங்காட் செலத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 34 ஹெக்டர் நிலப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. இத்தீச்சம்பவத்திற்கு கீழறுப்புச் செயல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் 7,416 ஹெக்டர் நிலப்பரப்பிலான அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் 0.45 விழுக்காட்டுப் பகுதியில் தீ சூழ்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இத்தீச்சம்பவத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் உள்பட பல்வேறு தாவர வகைகள் அழிந்ததாக கூறிய அவர், தீச்சம்பவத்திற்கு திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகச் சொன்னார்.

திறந்தவெளி தீயிடல் நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஜனவரி 27ஆம் தேதி அப்பகுதியில் தீ அபாயம் ஏற்பட்டுள்ளதை மாநில வன இலாகா கண்டறிந்த தாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி மேலும் ஏழு தீ அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இதுவரை 16 தீ ஆபத்து நிறைந்த பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவையாவும் காடுகளுக்கு தீ வைக்கும் நடவடிக்கையால் ஏற்பட்டவையாகும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் தீயை அணைக்கும் பணியில் 130 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தீயை முற்றாக கட்டுப்படுத்துதற்கு ஆறு வாரங்கள் பிடிக்கும் என்றும் அவர் சொன்னார்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மாநில வன இலாகா, பேரிடர் மேலாண்மைப் பிரிவு, கோல லங்காட் நகராண்மைக்கழகம், கோல லங்காட் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட துறைகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :