ECONOMYNATIONAL

அவசரகாலத்தில் கோவிட்-19  துடைத்தொழிப்பு- பொருளாதார மீட்சித் திட்டத்திற்கு முன்னுரிமை- மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப் 12– இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை அமலில் இருக்கும் அவசர காலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றைத் துடைத்தொழிப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கும் ஆக்ககரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் சுபிட்சத்திற்காகவும் நாட்டின் வளப்பத்திற்காகவும் அரசாங்கம் அமல்படுத்தி வரும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டமும் அதில் அடங்கும் என்று பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸதாபா பில்லா ஷா குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், அரசியலமைப்புக்கு அடித்தளமாக விளங்கும் அரசியலமைப்பு முடியாட்சியின் கீழ்  நாடாளுமன்ற தேர்தல் முறை தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அரசியல் நிலைத்தன்மை, வலுவான பொருளாதாரம், நாட்டின் நீடித்த மேம்பாடு ஆகியவை வலுவான  அரசாங்கத்திற்கு அடையாளமாக விளங்குவதாக மாமன்னர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்று இஸ்தான நெகாராவின் அரச விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி டத்தோ முகமது பாட்டில்  சம்சுடின் தெரிவித்தார்.

நாடு கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியமாகும் என்று பேரரசர் குறிப்பிட்டார்.

மக்களின் பாதுகாப்பையும் நாட்டின் வளப்பத்தையும் கருத்தில் கொண்டு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பேரரசர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் தங்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை மறந்து கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதில் தங்களின் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :