ECONOMYSELANGOR

அதிக உள்நாட்டு சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை

புத்ரா ஜெயா, அக், 1-  கடந்தாண்டில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகளை
 ஈர்த்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. 

உள்நாட்டு சுற்றுலா மூலம் சிலாங்கூர் கடந்தாண்டு 1,550 கோடி  வெள்ளியை 
ஈட்டியுள்ளது உள்நாட்டு சுற்றுலா தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநில ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் சிலாங்கூர் முதலிடம் வகிக்கும் வேளையில் 1,210 கோடி வெள்ளி வருமானத்துடன் கூட்டசு பிரதேசம் இரண்டாம் 
இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் சரவா (870 கோடி வெள்ளி), சபா (810 கோடி வெள்ளி), பேராக் (780 கோடி வெள்ளி) ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

கடந்தாண்டில் உள்நாட்டு சுற்றுலா மூலம் செலவிடப்பட்ட மொத்த தொகையில் 50.6 விழுக்காட்டு பங்களிப்பை இந்த ஐந்து மாநிலங்கள வழங்கியதாக மலேசிய புள்ளிவிவரத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.

கடந்தாண்டில் சிலாங்கூருக்கு வருகை தந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் 
எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சம் பேர் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூருக்கு 2 கோடியே 26 லட்சம் பேரும் சபாவுக்கு 2.2 கோடி பேரும் பேராக் மாநிலத்திற்கு 2.11 கோடி பேரும் சரவாவிற்கு 1.98 கோடி பேரும் 
வருகை புரிந்தனர் என்றார்.

விடுமுறையை கழிப்பதற்காக அதிகமானோர் அதாவது 42.8 விழுக்காடினர் மலாக்கா சென்றுள்ளனர். இந்த பட்டியலில் பினாங்கு, பகாங், சபா ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.

Pengarang :