ALAM SEKITAR & CUACAECONOMYEVENTSELANGOR

நீதிமன்றம்நீர் தூய்மைக்கேடு- சொஸ்மா சட்டத்தின் கீழ் இருவர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், நவ 24 ரவாங், சுங்கை கோங் ஆற்றில் நீர் மாசுபாடு ஏற்பட்டது தொடர்பில் இரு ஆடவர்கள் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவியல் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைள்) குற்றஞ்சாட்டப்பட்டனர்.

நீதிபதி மஸியா ஜோவரி தாஜூடின் முன்னிலையில் அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கை என வகைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நீர் மாசுபாடு சம்பவம் விசாரணைக்கு கொண்டு வரப்படுவது இதுவே முதன் முறையாகும்.

அவ்விருவர் மீதும் ஆறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குற்றவியல் சட்டத்தின் 124வது பிரிவு, 1974ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் சட்டத்தின் 18(1) மற்றும் 19(ஏ) பிரிவு, 2006ஆம் ஆண்டு தேசிய நீர் சேவை தொழில்துறை சட்டத்தின் 61(1)(பி) பிரிவு ஆகிய குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இது தவிர, 1974ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் 34பி(1)(ஏ) பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 34ஆம் பிரிவின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சேர்த்து வாசிக்கப்பட்டன.

அவ்விருவர் மீதான ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி அடுத்த விசாரணை வரை  இருவரையும் பெந்தோங் சிறையில் தடுத்து வைக்கும்படியும் உத்தவிட்டதாக சிலாங்கூர் மாநில குற்றவியல் துறை தலைவர் டத்தோ பட்சில் அகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.

மேலும் ஒரு ஆடவர் செலாயாங் நகராண்மைக்கழத்தின் 2007ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் தொழில்துறை லைசென்ஸ் துணைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

இவர்கள் மீதான வழக்கை ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு இரு நீதிமன்றங்களும் ஒத்தி வைத்தன. 

கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி அபாயகர பொருளை ரவாங், சுங்கை கோங் ஆற்றில் கலக்க விட்டதன் வழி கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கனரக இயந்திர பழுதுபார்ப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தின் இயக்குநர்களான அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

சாய் கின் சான் (வயது 62) மற்றும் அவரின் புதல்வர் சாய் வேன் தெய்க் (வயது 31) ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். 


Pengarang :