PBTSELANGOR

சிலாங்கூரில் கடந்த வாரம் 381 டிங்கி சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், டிச 30- சிலாங்கூரில் கடந்த 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 381 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின.

அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 360 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 5.8 விழுக்காடு அதிகமாகும் என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி  ஙடிமான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இவ்வாண்டின் 52வது வாரத்தில் மாநிலத்தில் 43,322 டிங்கி சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்தாண்டின் இதே  காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 72,543ஆக இருந்ததாக அவர் சொன்னார்.

டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டில 38.9 விழுக்காடு குறைந்துள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

ஐந்து மாவட்டங்களில் அதிகளவு டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவானதாக கூறிய அவர், பெட்டாலிங் (15,420 சம்பவங்கள்), உலு லங்காட் (9,737 சம்பவங்கள்), கிள்ளான் (6,930 சம்பவங்கள்), கோம்பாக் (6,588 சம்பவங்கள்), சிப்பாங் (2,392 சம்பவங்கள்)  ஆகியவையே அம்மாவட்டங்களாகும் என்றார்.

கடந்தாண்டில் 56 ஆக இருந்த டிங்கியினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை இவ்வாண்டில் 33.9 விழுக்காடு குறைந்து 37ஆக ஆனதாகவும் அவர் தெரிவித்தார்.

டிங்கி பரவலைத் தடுக்கும் விதமாக ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் வீட்டின் சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :