ECONOMYNATIONAL

கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு விரைவில் தொடங்கும்

கோலாலம்பூர், ஜன 15– நாட்டு மக்கள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான பதிவு விரைவில் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார்.

அந்த நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறுவதற்காக ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

முதலாவது முறை தடுப்பூசி செலுத்தப்படும் போது  வழங்கப்படும் அடையாள அட்டையை ஒவ்வொருவரும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இரண்டாவது முறை தடுப்பூசியை செலுத்துவதற்கான தேதி அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக, 21 நாட்களில் இரண்டாவது முறை தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

நேற்று ஆர்.டி.எம்.மில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை.

கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதியல் இயல்பு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதன்  முக்கிய நோக்கம் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, இறப்பு விகிதத்தைக் குறைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிப்பது ஆகியவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியா ஃபைசர்-பயோ என் டெக் நிறுவனத்தினத்திடமிருந்து  கோவிட்-19 தடுப்பூசிகளை அடுத்தமாத இறுதியில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :