NATIONALPress Statements

கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் நான்காயிரத்தை தாண்டியது

கோலாலம்பூர், ஜன 20– கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் நான்காயிரத்தைத்  தாண்டியது. இன்று நாடு முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4008ஆக பதிவானது.

கடந்த சனிக்கிழமை நாட்டில் மிக அதிகமாக அதாவது 4,029 சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 சம்பவங்களில் 4003 உள்நாட்டில் பதிவானவை என்றும் ஐந்து சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியானவை என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷா அப்துல்லா கூறினார்.

இன்று மொத்தம் 2,374 பேர் நோயிலிருந்து முற்றாக குணமடைந்ததாகக் கூறிய அவர், இதன் வழி இந்நோயிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 127,662 பேராக உயர்ந்துள்ளது என்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 246 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 96 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

சிலாங்கூரில் நான்கு, சபா மற்றும் ஜோகூரில் தலா மூன்று மற்றும் சரவாவில் ஒன்று என மொத்தம் 11 மரணச் சம்பவங்கள் இன்று பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார். இறந்தவர்களில் 9 பேர் உள்நாட்டினர். எஞ்சிய இருவர் வெளிநாட்டினராவர்.


Pengarang :