ECONOMYSELANGOR

தரிசு நிலங்களை வளப்படுத்தி வருமானம் ஈட்டுவீர்- கிராமப்புற மக்களுக்கு வேண்டுகோள்

கோல லங்காட், பிப் 20- தரிசாக கிடக்கும்  தங்கள் நிலங்களை வளப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும்படி கிராமப்புற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காலியாக இருக்கும் நிலங்களில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை பயிரிடுவதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு கிராமப்புற மக்களுக்கு கிட்டும் என்று புறநகர் மேம்பாடு மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

கிராமங்களில் பொதுவாக பெரிய அளவில் காலி நிலங்கள் காணப்படும். முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அந்நிலங்கள் புதர்கள் நிரம்பி காரணப்படும். தரிசாக கிடக்கும் இந்நிலங்களிலிருந்து எந்த வருமானமும் கிடைக்காது.

இந்நிலங்களை  கிராம மக்கள் விவசாய நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் குடும்ப மற்றும் கிராமப் பொருளாதாரம் மேம்படுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

இங்குள்ள சிஜங்காங் பத்து 8 கிராமத்தில் நடைபெற்ற கிராமத்தை நோக்கி நாம் எனும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் நிலங்களை அபிவிருத்தி செய்ய விரும்புவோருக்கு மூலதன உதவி செய்து தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :