ECONOMYSAINS & INOVASISELANGOR

கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர் குழுமத்தின்  வருமானம் வெ.100 கோடியைத் தாண்டியது

ஷா ஆலம், பிப் 28– கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர் (கேபிஎஸ்) நிறுவனம் கடந்த 2020 நிதியாண்டில் 110 கோடி வெள்ளியை வருமானமாகப் பெற்றது. இதன் வழி அந்நிறுவனம் புதிய அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020இல் அந்நிறுவனத்தின் வருமானம் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2019இல் அந்நிறுவனம் 86 கோடியே 69 லட்சம் வெள்ளியை வருமானமாகப் பெற்றது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் 31 கோடியே 86 லட்சம் வெள்ளியை கேபிஎஸ் வருமானமாகப் பெற்றதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அதற்கு முந்தைய ஆண்டு இதே  காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருமானம் 29 கோடியே 72 லட்சம் வெள்ளியாக இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

நீண்ட கால அடிப்படையிலான இலக்குகளை நிலைநிறுத்திக் கொள்ளும் அதேவேளையில் போட்டியிடும் ஆற்றலையும் நிதி நிலைமையையும் மேம்படுத்திக் கொள்வதற்கு நிறுவனம் எடுத்த முடிவுகள் வெற்றியைக் கொண்டு வந்துள்ளதை இது காட்டுகிறது என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் உற்பத்தித் துறை ஆண்டுக்கு ஆண்டு 14 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. கடந்தாண்டில் இத்துறை  86 விழுக்காட்டு பங்களிப்பை அதாவது 27 கோடியே 32  லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்டித் தந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 23 கோடியே 95 லட்சம் வெள்ளியாக இருந்தது.


Pengarang :