ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில்  83 விழுக்காட்டு முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 26– சிலாங்கூரில்   83 விழுக்காட்டு  முன்களப் பணியாளர்கள் முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெரும்பாலான முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் சுமார் 4,000 பேருக்கு மட்டுமே இன்னும் அந்த தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று அவர் சொன்னார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டம் வரும் ஏப்ரல் மாதவாக்கில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

முதல் கட்ட தடுப்பூசித் திட்டம் முடிவுக்கு வந்ததும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தை முன்னெடுப்பது எனது இலக்காகும். பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தும் மையங்களை தயார் செய்வது போன்ற பணிகளை இது உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர்.

இப்பணிகளை மாநில மற்றும் மாவட்ட நிலையிலான சுகாதார அதிகாரிகள் மேற்கொள்வர் என்று தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சிலாங்கூர் உந்து சக்தியாக விளங்குவதால் இம்மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை துரிதப்படுத்துவதில் தாங்கள் முனைப்பு காட்டி வருவதாக அவர் மேலும் சொன்னார்.

நேற்று முன்தினம் வரை சிலாங்கூரில் 55,336 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 2,032 பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

 


Pengarang :