SELANGORWANITA & KEBAJIKAN

இளம் பெண்ணுக்கு காயம் விளைவித்தனர்- தாய், மகளுக்கு தலா 1,000 வெள்ளி அபராதம்

கோலாலம்பூர், ஏப் 16– பதினாறு வயது உறவுக்கார பெண்ணுக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக தாய் மற்றும் மகளுக்கு இங்குள்ள செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிரான குற்றத்தை எ.ஜி.சரோஜா (வயது 53) மற்றும் அவரின் மகள் சி. சத்தியவதி (வயது 31) ஆகியோர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்  நிக் முகமது பட்லி அஸ்லான் இத்தண்டனையை வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி இங்குள்ள செலாயாங் பெரிங்கின் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அந்த இளம் பெண்ணை தலைமறைவாக உள்ள ஒரு நபருடன் சேர்ந்து வேண்டுமென்றே தாக்கியதாக அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுச் சிறை அல்லது 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச்  சட்டத்தின் 323வது பிரிவின் அவ்விருவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

தேசிய சட்ட உதவி அறவாரியத்தின் சார்பில் அவ்விருவரையும் பிரதிநிதித்த வழக்கறிஞர் எம்.மாரியப்பன், குடும்ப விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தங்கள் செயலுக்காக இருவரும்  வருந்துவதாதவும் தனது கருணை மனுவில் கூறினார்.

 

 


Pengarang :