ECONOMYSELANGOR

சிலாங்கூரில் 156 கடைகளில்  விலைக் கட்டுப்பாட்டு சோதனை

ஷா ஆலம், ஏப் 22– நோன்புப் பெருநாள் விலை உச்சவரம்பு கட்டுப்பாட்டு திட்டம் நேற்று அமல் செய்யப்பட்ட வேளையில் மாநிலம் முழுவதும் இதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடுமையான விதி மீறல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

நேற்று 156 வர்த்தக மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வர்த்தகர்கள் விலைக்கட்டுப்பாட்டை பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக  உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஜிக்ரி அஸான் அப்துல்லா கூறினார்.

மொத்த மற்றும் சில்லரை வியாபார மையங்களை இலக்காக கொண்டு இச்சோதனை நடத்தப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில்  விலை உச்ச வரம்பு மீறல் தொடர்பில் எந்த புகாரும் பெறப்படவில்லை என்று அவர் சொன்னார்.

விலையை நிர்ணயிப்பதில் விதிமுறைகளைப் பின்பற்றும்படி வியாபாரிகளுக்கு ஆலோசனை கூறிய அவர், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் பொருள்களின் விலையை உயர்த்தி  அதிகப்பட்ச அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

வியாபாரிகள் வர்த்தக நெறியைப் பின்பற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு வாடிக்கையாளர்களும் பொருள்களை அதிகமாக வாங்கி குவிக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நேற்று தொடங்கி வரும் மே மாதம் 20ஆம் தேதி வரை கோழி, முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் உள்பட 12 வகையான உணவுப் பொருள்களுக்கு பயனீட்டாளர் விவகார அமைச்சு விலைக்கட்டுப்பாட்டை நிர்ணயித்துள்ளது.


Pengarang :