ECONOMYNATIONALSELANGOR

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது

புத்ரா ஜெயா, ஏப் 26- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி  பாதுகாப்பானது என்பதோடு அது 60 வயதுக்கும் மேற்பட்ட தரப்பினருக்கு செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது அந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். மூத்த குடிமக்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காக கொண்ட இத்திட்டம் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி   மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்பதை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி பொருத்தமானது என்பதால் அத்தரப்பினரை மையமாக கொண்டு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

மலேசியா  268,000 அஸ்ட்ரஸேனேகா தடுப்பூசிகளை தென் கொரியாவிலுள்ள தயாரிப்பு மையத்திலிருந்து கடந்த வாரம் பெற்றது.

இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்ட்ராஸேனோ தடுப்பூசி ஆக்ககரமான பலனைத் தருவதாக தேசிய சுகாதார கழகத்தின் மருந்தக ஆய்வு கழக இயக்குநர் டாக்டர் கலையரசு எம். பெரியசாமி கூறினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 நிபுணர்கள் அடங்கிய குழு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும்  கோவிட்-19 காரணமாக ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்துவது ஆகிய மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அஸ்ட்ரோஸேனேகா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க முடிவெடுத்ததாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக தேர்வு துணைக் குழுவின் தலைவருமான அவர் சொன்னார்.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி அதிக நன்மைகளைத் தருவதை பல்வேறு தரவுகள் காட்டுவதாகக் கூறிய அவர், இரத்த உறைவுச் சம்பவங்கள் மிகவும் குறைவாவே பதிவாவதாகச் சொன்னார்.


Pengarang :